இவர்களோடு கதைய கேட்டா கண் கலங்குவீர்கள்..
இவர்களைப் போல் நம்மால் ஒருநாள் கூட வாழ முடியாது கதையை கேட்ட அதே கண்கள் கலங்குகிறது.
ஹரிஹர சுதன் தங்கவேலு என்கின்ற சாமானிய மனிதனின் வார்த்தை.
எனது வீட்டின் எதிர்த் தெருவில் ஒருவர் கொரானாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் பாசிடிவ் என உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களில் வீதி முழுவதுமாக முடக்கப்பட்டுவிட்டது. ஒரு நாளில் இரண்டு முறை சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக வந்து அனைவரின் உடல் நலம் விசாரிக்கிறார்கள். கனரக வாகனங்களில் மருந்துகள் தினசரி பீய்ச்சி அடிக்கப்படுகின்றன. இது அனைத்தும் முறையாக நடைபெறுகிறதா ! என சுகாதாரத்துறை அதிகாரிகள் தினமும் வந்து பார்க்கிறார்கள்.
மூன்று பேர் கொண்ட காவலர் குழு வீதியின் இருமுனை களையும் 24 மணி நேரமும் கண்காணிக்கிறார்கள். முதல் நாள் கடும் வெயிலிலும் அப்படியே நின்றிருந்தார்கள். எங்கள் வீட்டிலிருந்து சேர்கள் தந்தோம். அமர்ந்தார்கள். இரவு ஒரு மூன்று மணி இருக்கும். வீட்டுக் காமிராவில் பார்த்தேன். கொசுக்கடியில் நொடிக்கொரு முறை எழுந்து எழுந்து அமர்ந்திருந்தார்கள். ஒரு பெரிய காற்றாடி வீட்டில் இருந்தது. எடுத்துப் போட்டிருக்கிறேன். நன்றி என்றார்கள்.
கடந்த ஐந்து நாட்களாக அவர்களைக் கவனித்ததில், உரையாடியதில் ஒன்று புரிந்தது. பணி நேரம் முழுவதும் அவர்கள் எங்கும் நகரவே இல்லை. காய்கறி ஆள், பால் வண்டி, வாகன ஆட்கள் யார் அவர்களைக் கடந்தாலும் மாஸ்க் போடுங்க ப்ளீஸ் .. மாஸ்க் போடுங்க சார் என்று கண்டிப்பாகவே சொல்கிறார்கள். அவர்களைக் கடந்து பாதிக்கப்பட்ட வீதியில் யாரும் உள்ளே நுழையவும் முடியாது, அவசியமின்றி வெளியில் வரவும் முடியாது. வீதியில் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கிறோம். மறந்தும் காபி, டீ, தண்ணீர் கூட இவர்கள் யாரிடமும் கேட்பதில்லை. நாம் தந்தாலும் வேண்டாம் என மறுத்து விடுகிறார்கள். நோய்த் தொற்று காரணம் இல்லை. பணியில் இருக்கும் போது, இதுதான் எப்போதும் உத்தரவாம்.
இப்போது சென்னையில் மழை அடித்துப் பொழிகிறது. காற்றாடி நனைந்து விடுமோ என்று சென்று பார்த்தேன். பத்திரமாக அதை வீட்டுச் சுவர் அருகில் எடுத்து வைத்திருந்தார்கள். மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள்..
“சார் ! உள்ள வாங்க “ என்றேன்.
“ சாரி சார் .. நாங்க வரக்கூடாது” என வெளியில் சென்று நின்று கொண்டார்கள்.
மழை இன்னும் வேகமாகப் பெய்கிறது.
Super
ReplyDelete